அரசியல் பேட்டிகள்

பா.ம.க.வுக்கு கனவு காண உரிமை உள்ளது!

அசோகன்

ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக அளவில் நடத்திய பிரம்மாண்ட ரயில்மறியல் போராட்டத்திற்குப் பின்னால் சற்று ஓய்வாய் இருந்தார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன். “பாமகவில் இருந்து வெளியேற்றப்பட்டு, கட்சி தொடங்கி, நான்கு ஆண்டுகள் முடியும் தருவாயில் இருக்கிறது, தமிழகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாக எங்கள் கட்சியை முன்னிலைப்படுத்துகிறோம்” என்கிற வேல்முருகன் அந்திமழைக்கு அளித்த நேர்காணலில் சில பகுதிகள்:

நான்காண்டு தனிக்கட்சிப் பயணம் எப்படி இருக்கிறது?

சின்ன வயதிலிருந்தே அரசியலைக் கவனித்து, அதில் இயங்கி வருபவன் நான். பாமகவில் அடிப்படையிலிருந்து தொடங்கி என் உழைப்பால் கட்சியின் இணைப்பொதுச்செயலாளர் பதவி வரைக்கும் வந்தவன். இரண்டுமுறை எம்.எல்.ஏ. வாகவும் இருந்தவன். அன்புமணிக்கு போட்டியாக வந்துவிடுவேன் அல்லது அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு என்னால் சிக்கல் வரலாம் என்று கருதி என்னை பாமகவில் இருந்து வெளியேற்றினார்கள். என் உழைப்பை, இளமையை, பொருளாதாரத்தை உறிஞ்சிக்கொண்டு சக்கையாகத்தான் நான் வெளியேற்றப்பட்டேன். பாமகவில் இருந்து ஏராளமான பேர் வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி, இயக்கம் கண்டு பாமகவினரின் மிரட்டல் தாளாமல் மூடிவிட்ட நிலையில் தனிக்கட்சி தொடங்கி அதைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்று உறுதி எடுத்தேன். இன்றுவரை தமிழக மக்கள் உரிமைகளுக்காக நலன்களுக்காக குரல்கொடுக்கும் பொதுவான கட்சியாக இதை நடத்திவருகின்றேன். தமிழக மக்கள் உரிமைக்காக 150 போராட்டங்களுக்கும் மேல் நடத்தியதும் வெற்றி கண்டதும் வரலாறு.

பாமகவுடன் இன்று மோதல் போக்கு தொடர்கிறதா?

நான் தனிக்கட்சி தொடங்கியபோது என் மீதே பலமுறை கொலை வெறித்தாக்குதல்களை பாமகவினர் திட்டமிட்டு நடத்தினார்கள். எங்கள் கட்சியினரும் எதிர்கொண்டார்கள். ஆனால் இன்று அதையெல்லாம் புறம் தள்ளி தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களிலும் வளர்ந்திருக்கிறோம். சமீபத்தில் நடந்த ரயில்மறியல் போராட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். இப்போராட்டத்தில் முதல் கைது ராமேஸ்வரத்தில்தான் நடந்தது. வட மாவட்டங்களில் அல்ல. இந்த வளர்ச்சியெல்லாம் உயிருக்கு ஆபத்து என்று இருந்தபோதும் அதை எதிர்த்து நின்றுதான் வெற்றி பெற்றுள்ளோம். கெயில் நிறுவன முற்றுகை, கிரிக்கெட் கிளப்பில் தமிழர்கள் பாரம்பரிய ஆடை அணிய அனுமதி இல்லாததை எதிர்த்துப்போராட்டம், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்த நிலையில் அங்கு விளையாட கபடி வீரர்களை அனுப்பியதை எதிர்த்துப்போராடியது, இலங்கை காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் போவதற்கு எதிர்ப்பு, முல்லைப்பெரியாறு, காவிரி,தென்பெண்னை, பாலாறு நதி உரிமைகளுக்கான பல போராட்டங்கள் என்று நாங்கள் போராடியவற்றின் பட்டியல் பெரிது. இவை ஒவ்வொன்றிலும் எங்கள் கோரிக்கைகளை அதிமுக அரசு பரிசீலித்து நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. சில நூறுபேர் களுடன் செய்யும் போராட்டங்கள் அல்ல அவை. ஆயிரக்கணக்கானோரைத் திரட்டிச் செய்யும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் அவை.

வன்னியர்கள் அதிகம் உள்ள கட்சியான பாமகவிலிருந்து வந்தவர் நீங்கள். உங்கள் கட்சியினரும் பெரும்பாலும் வன்னியர்களாக இருக்கின்ற காரணத்தால் தருமபுரி இளவரன் பிரச்னை, சமீபத்திய சேஷசமுத்திரம் பிரச்னைகளில் வன்னியர்களைக் கண்டிக்கத் தவறுவதாகச் சொல்கிறார்களே?

இது முற்றிலும் தவறு. இது என் அறிக்கைகளைப் படிக்காதவர்கள் சொல்வது. தர்மபுரி பிரச்னையிலும் கண்டித்திருக்கிறேன். சேஷ சமுத்திரம் பிரச்னையிலும் வெறிபிடித்து அலைபவர்களையும் பத்திரிகையாளர் சந்திப்பில் கண்டித்தேன். அதே சமயம் அதனுடன் தொடர்பில்லாத பல கட்சி நபர்கள் மீது காவல்துறை அடக்குமுறை பாய்வதையும் கண்டித்துள்ளேன். எங்கள் கட்சி தமிழக மக்களின் உரிமைக்காகப் போராடும் பொதுவான இயக்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 150 அமைப்புகளை உள்ளடக்கிய தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து என்னால் நடத்தமுடிகிறது. பொதுப்பிரச்னைகளில் போராட்டம் நடத்தமுடிகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மக்கள் நலக்கூட்டியக்கத்தில் சேர உங்களுக்கு அழைப்பு இல்லையா?

பொதுப்பிரச்னைகளில் ஏற்கெனவே இணைந்து செயல்பட்டிருக்கிறோமே? இப்போது நான் அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்படுகிறேன். ஒருவேளை நான் இதில் சேர்வதற்கு முன்னால் இந்த இயக்கம் உருவாகி இருந்தால் நான் அதில் இணைந்திருக்கலாம். நான் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணியை மாற்றுகிறவன் அல்ல.

அதிமுக அரசின் நான்காண்டுகால செயல்பாடு?

தமிழர் நல, உரிமைச் செயல்பாடுகளில் அதிமுக அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. ஈழத்தமிழர் பிரச்னையில் பொருளாதாரத் தடை சர்வதேச விசாரணை கோரி தீர்மானங்கள், பேரறிவாளன், சாந்தன் போன்றோரை விடுதலை செய்ய மத்திய அரசுக்கே காலக்கெடு விதித்தது போன்ற விஷயங்களை கருணாநிதியால் செய்திருக்கவே முடியாது. காவிரித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது, முல்லைப்பெரியாறு அணையில் சாதகமான தீர்ப்பைப் பெற்றது, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் விரைந்து செயல்படுவது என்று முத்திரை பதித்துள்ளது. மாநில உரிமைகளைப் பாதுகாப்பதிலும் சிறப்பாகச் செயல்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இருக்கிறேன் என்கிறீர்கள். திமுக தலைவருக்கு ஒரு காலத்தில் நெருக்கமானவர் நீங்கள். அவரே அழைத்தால் அந்தப் பக்கம் போவீர்களா?

எங்கள் கோரிக்கைகளையெல்லாம் கனிவாக அதிமுக அரசு பரிசீலிக்கிறது. நடைமுறைப்படுத்துகிறது. தமிழர் உரிமைக்கான எங்கள் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக இது இருக்கிறது. எனவே நாங்கள் கூட்டணி மாறவேண்டிய அவசியமே இல்லை. அத்துடன் முன்பே சொன்னதுபோல் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை மாற்றும் பழக்கமும் எனக்கு இல்லை.

அன்புமணி முதல்வர் வேட்பாளர் என்று பாமக சொல்கிறதே?

அப்துல் கலாம் சொன்ன கனவு காணும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. இதற்கான பதிலை மக்கள் தேர்தலின் போது கூறுவார்கள்.

அக்டோபர், 2015.